.jpg)
திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் புதிய நூலகத்தை இன்று( ஜூன் 10)தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சுகமார் , மருத்துவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள், தேசிய அளவிலான பிரச்சனைகள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
'தமிழக முதலமைச்சர், பொதுமக்கள் காத்திருக்கும் இடங்களில் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.300 கோடி செலவில் மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என 100 பொது நூலகங்களை அமைக்க உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி சித்த மருத்துவமனையில் இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகள் மருத்துவரைச் சந்திக்கக் காத்திருக்கும் நேரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த நூலகம் செயல்படும். இதனால், மக்களின்வாசிப்புப் பழக்கம் மேம்படும்.
தமிழகத்தில் 41% பெண்கள் வேலைக்குச் செல்லும் நிலையில், கட்டணமில்லா பேருந்து சேவை, பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பான சூழல் என பெண்களுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்குப் பாதிப்போ, பிரச்சனைகளோ இல்லை என்றும், சில தனிநபர்களின் தவறான செயல்கள் மட்டுமே நடக்கின்றன . ஆனால், அரசு வேடிக்கை பார்க்காது . அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் அமைதிப் பூங்கா . ஓரிரு சம்பவங்களை வைத்து ஒட்டுமொத்தமாக மாநிலத்தைக் குறை கூறக்கூடாது .
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது . பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்துதான் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் தமிழகத்திற்கு வருகின்றன. தமிழகத்தில் கஞ்சா உற்பத்தி இல்லை .ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களை வைத்து அரசியலுக்காக குற்றம்சாட்டுபவர்களுக்கு பதில் கூற முடியாது . குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை அரசு கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது . கடந்த ஆட்சியில் கூலிப்படை கலாச்சாரம் இருந்தது.ங ஆனால் திமுக அரசு வந்த பிறகு கூலிப்படைகள் அடக்கப்பட்டுவிட்டன.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சமீபத்தில் இரு கொலைச் சம்பவத்தைத் தடுத்து நிறுத்தியதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவிலேயே அமைதியான மாநிலம் தமிழ்நாடுதான் . மிகப்பெரிய தொழில் வாய்ப்புகள் தமிழகத்தில் உருவாவதற்கு இந்த அமைதியான சூழலே காரணம் .'
இவ்வாறு அவர் கூறினார்.