
வள்ளியூர் முருகன் கோயிலுக்கு பாத்தியபட்டப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான 60 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அதிரடியாக மீட்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் புகழ் பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான நிலங்கள் உள்ளன. அந்த வகையில், வள்ளியூர் அருகேயுள்ள குமாரபுதுகுடியிருப்பில் 4 ஏக்கர் 52 சென்ட் இடம் இருக்கிறது. இதில் 60 சென்ட் நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து விற்க முயற்சிப்பது பற்றிய தகவல் அறநிலைத்துறையினருக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வள்ளியூர் முருகன் கோயில் செயல் அலுவலர் மாரியப்பன், அறங்காவலர் குழு தலைவர் மீனா மாடசாமி மற்றும் அறங்காவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர், அந்த நிலத்தில் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான இடம். இதனை ஆக்கிரமிப்பு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என விளம்பர போர்டு வைத்தனர். இதற்கு அப்பகுதியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அவர்களை சாமாதானம் செய்தனர். பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனால் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது.