
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான பசு மாடு கடையநல்லூர் பகுதியில் உள்ள பால்பாண்டி என்பவரின் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்ததில் அது வெடித்துச் சிதறி பசுமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக முருகன் அளித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பால்பாண்டி தனது தோட்டத்தில் பன்றியை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்தது தெரியவந்தது.
விசாரணையின் போது, பால்பாண்டியுடன் அவரது சகோதரர் சந்தனபாண்டி மற்றும் கரிசல்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சுபாஷ், செங்கோட்டையைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராம்ஜி ஆகிய நான்கு பேரும் வேட்டைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் எனத் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நாட்டு வெடிகுண்டு மற்றும் நாட்டு துப்பாக்கி இருப்பதும் கண்டறியப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார் நாட்டுத் துப்பாக்கி மற்றும் நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.