மின்மாற்றியை பழுதுபார்க்க முயன்ற விவசாயி பலி ஆபத்தான மின் வேலைகளில் மக்கள் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை

armer-dies-while-trying-to-repair-transformer

திருநெல்வேலி மாவட்டம், பரப்பாடி அருகே மாங்குளத்தில் மின்சாரம் தடைபட்டபோது, மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மர்) பழுதுபார்க்க முயன்ற விவசாயி ஒருவர் கீழே தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மாங்குளத்தில் நேற்று திடீரென மின்சாரம் தடைபட்டபோது, அதிலிருந்த பியுஸை மாற்ற, பெருமாள் (வயது 55) என்ற விவசாயி முற்பட்டுள்ளார்.

அப்போது பெருமாள் அந்த மின்மாற்றியில் மின்சாரத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

மின்மாற்றி மீது ஏறியபோது, பெருமாள் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது. இதனால் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் படு காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தத் தகவல் கிடைத்ததும், வடக்கு விஜயநாராயணம் போலீசாரும், மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், பெருமாளின் உடலை மீட்டு கூராய்வு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மின்வாரியப் பணியாளர்கள் அல்லாதோர் மின்சாரம் தொடர்பான எந்தவொரு பழுதுபார்க்கும் பணிகளிலும் ஈடுபட வேண்டாம் என்றும், மின்சாரம் தடைபட்டால் உடனடியாக மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவித்து அவர்களது உதவியை நாட வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்வாரியத்திற்கு தொடர்பில்லாத நபர்கள் மின் சாதனங்களை கையாளும்போது ஏற்படும் விபத்துகள் தவிர்க்க முடியாத பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது.