வள்ளியூர் அருகே பரபரப்பு : நிலப்பிரச்சனையால் இருதரப்பினர் பயங்கர மோதல்

clash-between-two-parties-over-land-dispute

வள்ளியூர் அருகே உள்ள தங்கையத்தில் நிலப்பிரச்சனை தொடர்பாக இருதரப்பினர் கம்பு மற்றும் அரிவாளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே தங்கையத்தைச் சேர்ந்தவர் சித்திரைபாண்டி. இவரும் அதே பகுதியை சேர்ந்த வன்னியராஜாவும் உறவினர்கள். இவர்களுக்கு அதே பகுதியில் 60 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது. இதில் இரண்டு குடும்பத்தினர்களுக்கும் தலா 12 சென்ட் நிலம் பிரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஒரு தரப்பு உரிமை கோரியதால் , இரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது.

இந்நிலையில் நிலத்தகராறு காரணமாக நேற்று மதியம் மீண்டும் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது, இருதரப்பினரும் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். வன்னியராஜாவின் மகன் ராஜலிங்கம் எதிர் தரப்பை சேர்ந்தவர்களை அரிவாளால் வெட்டினார்.

இதில், சித்திரைபாண்டி, கண்ணன், அந்தோணிராஜ் உள்ளிட்ட 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கம்பால் தாக்கப்பட்டதில் வன்னியராஜாவுக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையிலும், நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.