ராஜ்யசபா எம்.பி.யாக இன்பதுரை : பழைய சோறு கொடுத்தால் கூட போதும்... அதிமுகவினரை உருக வைத்த சம்பவம்

admk-pary-feeds-elder-people-in-manikkapuram-home


நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினரும் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளருமான இன்பதுரை சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி துணை தலைவர் நவீன் முத்து சரவணன் தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து நாங்குநேரி ஒன்றியம் பரப்பாடி அருகேயுள்ள கல்மாணிக்கபுரம் அன்னை தெரசா முதியோர் மற்றும் சிறுவர் காப்பகத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் நவீன் முத்து சரவணன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி துணை செயலாளர் பொன்ராஜ், பொருளாளர் ஜேம்ஸ், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பெட்டை குளம் கணேசன், திசையன்விளை நகர பொருளாளர் அல் அமீன் முகம்மது அலி, கிளை செயலாளர் ஜேசு ராஜன்,சூடு உயர்ந்தார்விளை பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். காப்பக நிர்வாகி சகோதரி.மரிய ரத்னா வழக்கறிஞர் நவீன் முத்து சரவணன் மற்றும் அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு இந்த இல்லத்தை நடத்துகிறோம். மக்கள் எங்களுக்கு உதவினால் நாங்கள் நல்லபடியாக இந்த ஹோமை நடத்துவோம். பழைய சோறு தந்தால் கூட போதுமானது என்று உருக்கமாக தெரிவித்தார்.