தென்காசி முதியோர் இல்லத்தில் 4 முதியவர்கள் பலி... அதிகாரிகள் ஆய்வில் நடந்தது என்ன?

what-is-resaon-behind-4-person-dead-in-elder-home-near-tenkasi

தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் அசைவ உணவு சாப்பிட்டு நான்கு பேர் உயிரிழந்தனர். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவர் மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக டீன் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சுரண்டை சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் இல்லத்தில் மொத்தம் 59 முதியவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். கடந்த ஜூன் 11 ம் தேதி மதியம் அசைவ உணவு சாப்பிட்ட பலருக்கும் திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கர் கணேஷ் (42), முருகம்மாள் (60), அம்பிகா (40) ஆகிய 3 பேர் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஜூன் 13 ம்தேதி அதிகாலையில், சிகிச்சை பலனின்றி மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி (80) என்ற மற்றொரு பெண்ணும் உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவம் குறித்து சாம்பவர்வடகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், உதவி கலெக்டர் லாவண்யா, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி கோவிந்தன், உணவுப் பாதுகாப்பு அதிகாரி புஷ்பராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் முதியோர் இல்லத்துக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. சமையலறையில் உள்ள உணவுப் பொருட்கள் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வுக்குப் பிறகு, அதிகாரிகள் காப்பகத்தை பூட்டி சீல் வைத்தனர். அங்கிருந்த பிற, முதியவர்கள் வடகரையிலுள்ள வேறு ஒரு காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர்.

இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கைகாகவும், அசைவ உணவு மற்றும் குடிநீர் மாதிரிகளின் ஆய்வு முடிவுகளுக்காகவும் போலீசார் காத்திருக்கின்றனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே முதியவர்கள் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பாட்டாக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில், காப்பகத்தை நடத்தி வந்த கீழபாட்டாக்குறிச்சியைச் சேர்ந்த ராஜேந்திரன் (50) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.