திருநெல்வேலி: நீட் தேர்வில் பட்டையை கிளப்பிய திமுக முன்னாள் சபாநாயகரின் பேரன் - யார் இந்த அவனிஷ் பிரபாகர்!

got-rank-in-neet-exam-who-avanish-prabahar

நீட் தேர்வு பற்றிய சர்ச்சை ஒருபுறம் இருக்க, நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பனின் பேரன் அவனிஷ் பிரபாகர் சாதனை படைத்துள்ளார்.

மருத்துபடிப்புக்கான நீட் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் , திருநெல்வேலி புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த அவனிஷ் பிரபாகர், அகில இந்திய அளவில் 922வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர், 720க்கு 608 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த அவனிஷ் வேறு யாருமல்ல. திருநெல்வேலியின் திமுகவின் முகங்களில்ஒன்றாக பார்க்கப்படும் முன்னாள் சபாநாயகர் ஆவுடைப்பனின் பேரன்தான்.அதாவது ஆவுடையப்பனின் மகன் பிரபாகரனின் மகன்தான் இந்த அவனிஷ் பிரபாகர்.

அதே வேளையில், ஆவுடையப்பன், நீட் தேர்வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார். நீட் தேர்வை எதிர்த்து திமுக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், ஆவுடையப்பன் தனது பேரனுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்வாரா? என்று சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.

ஆவுடையப்பனின் மகன் பிரபாகரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் நீட் எதிர்ப்புப் போராட்டங்கள், மறுபுறம் குடும்பத்திலேயே ஒருவர் நீட் தேர்வில் ரேங்க் பட்டியலில் இடம் பிடித்ததும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அவனிஷ் பிரபாகரின் இந்த வெற்றி, அவர் படித்த புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளது. அவனிஷுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.