தேசிய அளவிலான மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், திருநெல்வேலி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவர் எம். மணிகண்டகிருஷ்ணா 522 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்றுள்ளார்
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. பி காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் சிவகாமசுந்தரி தம்பதியின் மகனான மணிகண்டகிருஷ்ணா, தனது கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையுடன் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில், மணிகண்டகிருஷ்ணா 522 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். பாடவாரியாக இயற்பியலில் 98.68%, வேதியியலில் 94.78%, மற்றும் உயிரியலில் 99.31% மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
இவர், அகில இந்திய அளவில் 29928-வது இடத்தையும், OBC - NCL (Central List) பிரிவில் 13826-வது இடத்தையும் பிடித்துள்ளார். இதனால், அவருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மணிகண்டகிருஷ்ணாவின் இந்த வெற்றி, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் உரிய வாய்ப்புகளும், வழிகாட்டுதலும் கிடைத்தால் எந்த உயரத்தையும் அடைய முடியும் என்பதை எடுத்து காட்டியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, சில சமயங்களில் அதைவிடவும் சிறப்பான வகையில் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதிக்கின்றனர் என்பதற்கு மணிகண்டகிருஷ்ணா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இவரின் வெற்றி, வருங்காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு உந்துசக்தியாக அமையும். மணிகண்டகிருஷ்ணாவுக்கு திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள்,சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.










