தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட 70 காலியிடங்களை நிரப்ப குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பதவிகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிலையில், இன்று குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித்தேர்வு நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை குரூப்-1 தேர்வானது நெல்லை மாநகர பகுதியில் 22 தேர்வு மையங்களிலும், மாவட்டத்தில் 8 மையங்களிலும் நடைபெறுகிறது. தேர்வு எழுத மொத்தம் 7 ஆயிரத்து 570 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கிது. தேர்வு எழுத 30 நிமிடங்களுக்கு முன்பாகவே வந்தவர்கள் மட்டுமே தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.அதன்பின்னர் வந்தவர்கள்தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடந்தது. பிற்பகல் 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையில் இருந்து வெளியே செல்ல யாரும் அனுமதியில்லை.
தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம், புளூடூத் போன்ற மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடுமையான பரிசோதனைகளுக்கு பின்னரே தேர்வு எழுத வந்தவர்கள் மையத்தின் உள்ளே சொல்ல அனுமதிக்கப்பட்டனர். நுழைவுச்சீட்டு, பேனா, அடையாள அட்டை மட்டுமே எடுத்துச்சென்றனர். மாநகரில் தேர்வு மையங்களை கலெக்டர் சுகுமார் பார்வையிட்டார்.
அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் உள்பட 3 பேர் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. பெரும்பாலான தேர்வு மையங்கள் சேரன்மகாதேவி உட்கோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக இன்று காலையில் போலீசாரின் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் வந்து சேர்ந்தது. மேலும் பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனை நடத்தினர்.தேர்வையொட்டி போக்குவரத்து கழகம் சார்பில் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று குரூப்-1 தேர்வு மொத்தம் 22 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுக்காக மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 952 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு மையங்களில் 4 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகரில் உள்ள மையங்களில் கலெக்டர் இளம்பகவத் நேரில் ஆய்வு செய்தார்.









.jpg)
