மக்கள் கூடும் இடங்களில் புத்தகம் வெளியீடு ...நெல்லை எழுத்தாளர்களின் வித்தியாசமான முயற்சி

book-launch-at-public-places-a-unique-initiative-by-nellai-writers

பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் "உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள்" மற்றும் "கிருஷ்ண ஜனனம்" ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழிலக்கிய முன்னோடி க.நா.சுப்ரமண்யம் 1960 ஆம் ஆண்டில் கல்கி பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைத் தொடரை பதிப்பாளர் ஸ்ரீநிவாச கோபாலன் 65 வருடங்களுக்குப் பிறகு, ' உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள் என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுத்துள்ளார். இந்த நூலை வாசகர் சுடலைமுத்து வெளியிட வாசகர் பொன்னையா பெற்றுக் கொண்டார். நூல் குறித்து சுடலைமுத்து விளக்கி பேசினார்.

அதே போல, இளம் எழுத்தாளர் சுரேஷ் ப்ரதீப் எழுதிய குறுங்கதைகளின் தொகுப்பான "கிருஷ்ண ஜனனம்" நூலை வாசகர் சாமுவேல் ராஜா வெளியிட வாசகர் மாரி விஜய் பெற்றுக்கொண்டார். சாமுவேல் ராஜா நூல் குறித்து விரிவாக பேசினார். அழிசி பதிப்பகத்தின் பதிப்பாளர் ஸ்ரீநிவாச கோபாலன் வரவேற்புரையும் கவிஞர் மதார் நன்றியுரையும் வழங்கினார்கள்.

கவிஞர் ஆகாசமுத்து, வாசகர் ஈஸ்வரன் இருவரும் நினைவுப்பரிசு வழங்கினர். மக்கள் கூடும் பொது இடங்களில் இந்த நூல்கள் வெளியிடுவதால் இலக்கியம் மற்றும் புத்தகங்கள் பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.