பணகுடி அருகே பெண் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாயமான கயல்விழி என்ற பெண் 8 மாதங்களுக்குப் பிறகு திருநெல்வேலி அருகே எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பழவூர், மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் கயல்விழி. திருமணமான இரு ஆண்டுகளில் கணவரைப் பிரிந்து விட்டார். இவருக்கு குழந்தை இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் திடீரென மாயமானதால்,உறவினர்கள் பழவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போதிலும், பல மாதங்களாக வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
சமீபத்தில் , வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை போலீசார் ஏராளமான சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, கயல்விழியை பஜாரில் வைத்து ஒரு பெண் உள்பட 4 பேர் அடங்கிய கும்பல் காரில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இந்தக் காட்சிகளின் அடிப்படையில், 4 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணயில், முன்னுக்குப் பின் முரணாகப் அவர்கள் பதிலளிக்கவே, போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது, நகைக்காக கயல்விழியை அவர்கள் கொலை செய்தது அம்பலமானது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், கயல்விழியை களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் உள்ள கங்கணாங்குளம் அருகே 80 அடி கால்வாய் பகுதிக்குக் கொண்டு வந்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும், பின்னர் உடலை கால்வாயில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து , வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ் தலைமையிலான போலீசார் கயல்விழியின் உடல் வீசப்பட்டதாகக் கூறப்படும் கால்வாயில் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். தற்போது, மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு அந்த கால்வாயிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.










