திருநெல்வேலி மாநகராட்சிப் பூங்காக்கள்: நிதி ஒதுக்கீடும், கள எதார்த்தமும் - ஒரு அவல நிலை!

Tirunelveli-Corporation-Parks-Funding-allocation-and-ground-reality-a-sorry-state-of-affairs

திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 252 பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள், மாநகராட்சி பட்ஜெட்டில் கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நகரின் முக்கிய பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி மையங்களாகத் திகழ வேண்டிய இந்தப் பூங்காக்களின் அவல நிலை, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடிப்படை வசதிகளின்மை:

மாநகராட்சிப் பூங்காக்களின் மிக முக்கியப் பிரச்சினையாக அடிப்படை வசதிகளின்மை உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிக்காக வரும் பொதுமக்கள், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் இன்றி பெரும் அல்லல்படுகின்றனர். மேலும், இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால், முதியோர்கள் அச்சத்துடன் பயன்படுத்துவதாகவும், பல நேரங்களில் இருள் சூழ்ந்திருப்பதால் விபத்துகளுக்கும் வழிவகுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மாநகராட்சி மண்டலங்களும் பூங்கா எண்ணிக்கையும்:

திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாக வசதிக்காக நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
* தச்சநல்லூர் மண்டலம்: 56 பூங்காக்கள்
* பாளையங்கோட்டை மண்டலம்: 50 பூங்காக்கள்
* மேலப்பாளையம் மண்டலம்: 114 பூங்காக்கள்
* திருநெல்வேலி மண்டலம்: 32

பூங்காக்கள் நிதி ஒதுக்கீடு –களப்பணி பற்றாக்குறை:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அம்ருத் (AMRUT) திட்டத்தின் கீழ் 2015-16, 2016-17, மற்றும் 2017-18 ஆகிய ஆண்டுகளில் சில பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டன. நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் கூட, மாநகராட்சிப் பராமரிப்பில் உள்ள பூங்காக்களைச் சரிசெய்ய ₹2 கோடி நிதியும், பூங்காக்களுக்குள் உடற்பயிற்சிக் கூடம் அமைக்க ₹50 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடுகள் இருந்தபோதிலும், பெரும்பாலான பூங்காக்களில் ஒரு வேலை கூட முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்றுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லை என்றும், பூங்காக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் மாநகராட்சி மெத்தனமாகச் செயல்படுவதாகவும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

நிர்வாகச் சீர்கேடும் விபத்துகளும்:

திருநெல்வேலி மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேட்டினால் பல பூங்காக்கள் பொலிவிழந்தும், செயலிழந்தும் காணப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு குழந்தையின் கால் துண்டானது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கியதோடு தங்கள் பணி முடிந்துவிட்டதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுபோன்ற பெரிய விபத்துகள் வெளியே தெரிந்தாலும், பெரும்பாலான பூங்காக்களிலும் தினந்தோறும் சிறுவர்களும் குழந்தைகளும் சிறிய காயங்களுடன் திரும்பிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. காயங்கள் லேசாக இருக்கும் வரை மாநகராட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்ற அலட்சியப் போக்கு நிலவுவதாகவும், மாநகராட்சிப் பூங்காக்களில் ஏதேனும் பெரிய அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பொதுமக்களின் கோரிக்கை:

ஒவ்வொரு மாமன்ற கூட்டத்திலும் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்வைக்கின்றனர். ஆனால், மனுக்கள் மீது விவாதம் நடத்தப்படுகிறதே தவிர, பெரும்பாலான வார்டுகளில் எண்பது சதவீதம் பணிகள் கூட நடைபெறவில்லை என்பது மாமன்ற உறுப்பினர்களின் ஆதங்கமாக உள்ளது. மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர் அவ்வப்பொழுது ஒவ்வொரு வார்டுகளிலும் ஆய்வினை மேற்கொண்டு வந்தாலும், ஆய்வு செய்தது வெறும் அறிக்கையாகவே உள்ளதே தவிர, எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை என்று பெரும்பாலான மக்கள் தங்களது வேதனைகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் இயங்கும் திருநெல்வேலி மாநகராட்சியும், பூங்காக்களைப் பராமரிக்கும் பணியாளர்களும், மக்களுக்கு இருக்கும் ஒரே ஒரு பொழுதுபோக்கு அம்சத்தினை முறையாகப் பயன்படுத்தும் அளவிற்கு மாற்றிக் கொடுக்காவிட்டாலும், குறைந்தபட்சம் இருக்கும் பூங்காக்களையாவது பராமரித்துத் தர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நெல்லை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, அனைத்துப் பூங்காக்களிலும் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் அவசரக் கோரிக்கையாகும்.