நெல்லையில் இலங்கை தமிழ் எழுத்தாளர் ராணி ஸ்ரீதரன் கலந்துரையாடல்

Sri-Lankan-Tamil-writer-Rani-Sreedharan-in-conversation

நெல்லை ஜங்ஷன் மீனாட்சிபுரம் அரசு கிளை நூலகத்தில், இலங்கை தமிழ் எழுத்தாளர் கவிஞர் ராணி ஸ்ரீதரன் பங்கேற்ற இலக்கிய கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது. தாமிரபரணி வாசகர் வட்டம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய வாசிப்பு இயக்கத்தின் தலைவர் தம்பான் தலைமை தாங்கினார். பாரதியார் உலகப் பொதுச்சேவை நிதிய செயலாளர் கணபதி சுப்பிரமணியன் மற்றும் கலைப்பதிப்பக ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்டத் தலைவர் சரவணக்குமார் அனைவரையும் வரவேற்றார். இலங்கையைச் சேர்ந்தவரும், மாணவர்களுக்காக சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவருமான எழுத்தாளர் ராணி ஸ்ரீதரன், இலங்கை தமிழ் எழுத்துலகத்தின் சிறப்புகள் மற்றும் தான் சந்தித்த சவால்கள் குறித்து விரிவாகப் பேசினார். அவரது கணவர் ஸ்ரீதரன், கவிஞர்கள் முத்துசாமி, சுப்பையா, நிழல் இலக்கியத்தளம் பிரபு, முன்னாள் துணை ஆட்சியர் தியாகராஜன், மாணிக்கவாசகம், சுரேஷ், அஸ்வின், ஓவியர் சந்தானம் உள்ளிட்ட பலரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
கூட்டத்தின் நிறைவாக, எழுத்தாளர் ராணி ஸ்ரீதரன் தான் எழுதிய சிலப்பதிகாரம் நூலை நூலகத்திற்கு வழங்கினார். நூலகர் அகிலன் முத்துக்குமார் நன்றி கூறினார். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் சொக்கலிங்கம் செய்திருந்தார்.

கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் ராணி ஸ்ரீதரன், பெண் கவிஞர்களின் பங்களிப்பும் போருக்குப் பிந்தைய அனுபவங்களும் பெண் கவிஞர்கள், குறிப்பாகப் போர்க்கால அனுபவங்களை நேரடியாக அனுபவித்தவர்கள், தங்கள் பாடல்கள் மூலம் அந்த அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம், ஏனெனில் ஆரம்ப காலகட்டத்தில், பெண்களின் உணர்வுகளை ஆண்கள் மட்டுமே வெளிப்படுத்தி வந்தனர். அக்காலத்தில், பெண்கள் எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட வரையறை இருந்தது; அவர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது, இந்த நிலை மாறிவிட்டது.

ஆண்டாள் போன்றோர் இந்த மாற்றத்திற்கு ஒரு சிறந்த உதாரணம். ஆரம்பத்தில், அவர்கள் தங்கள் படைப்புகளை வெளியிடுவதில் சில தடைகளை எதிர்கொண்டனர். இருப்பினும், அவர்கள் தொடர்ந்து தங்கள் உணர்வுகளையும் அனுபவங்களையும் கலை மூலம் வெளிப்படுத்தி வந்தனர்.

போர் முடிந்த பிறகு, தமிழ்நாட்டில் உள்ள மக்கள், போரினால் ஏற்பட்ட நீண்டகால விளைவுகளையும், இழப்புகளையும் இன்னும் உணர்ந்து வருகின்றனர். இந்தச் சூழலில், பெண் கவிஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அவர்கள் போரின் துயரங்களையும், அதன் சமூக விளைவுகளையும் தங்கள் கலைப் படைப்புகள் மூலம் வெளிப்படுத்தி, மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்றார்.