பாபநாசம் அணை நீர்மட்டம் 134 அடியை எட்டியது. அடவிநயினார் அணை நீர் இருப்பு அதிகரிப்பு

papanasam-dam-water-level-reaches-134-feet-adavinayanar-dam-water-storage-increases

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக பெய்து வருகிறது. 2 வாரங்களுக்கும் மேலாக மலைப்பகுதியில் தொடர் மழையால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நெல்லை

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 1 வாரத்தில் கணிசமாக உயர்ந்து வருகிறது. நேற்று 132 அடியை எட்டிய நிலையில் இன்று காலை நிலவரப்படி மேலும் 1 அடி உயர்ந்து 133.45 அடியை எட்டியுள்ளது. அணைக்கு விணாடிக்கு 2348 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு 1500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணை பகுதியில் 14 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

பாபநாசம் அணை நிரம்புவதற்கு இன்னும் 10 அடி தண்ணீரே தேவைப்படுகிறது. தென்மேற்கு பருவமழை இன்னும் 2 மாதங்கள் பெய்யும் என்பதால் இந்த ஆண்டு பாபநாசம் அணை தென்மேற்கு பருவமழை காலத்தில் நிரம்பிவிடும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேநேரம் கால்வாய்களில் தண்ணீர் திறப்பால் கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 143.76 அடியாக உயர்ந்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 95 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 464 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக 75 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 41 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஊத்து பகுதியில் 36 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 29 மில்லிமீட்டரும், மாஞ்சோலையில் 24 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 78 1/2 அடியாக உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 77 அடியாக உள்ளது. குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 69 அடியை எட்டியுள்ளது. மாவட்டத்தின் பெரிய அணையான 132 அடி கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 2 1/2 அடி உயர்ந்து 120 அடியை தொட்டுள்ளது.