வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு ஆணை: சபாநாயகர் மு. அப்பாவு கோரிக்கை ஏற்பு

Tamil-Nadu-government-orders-to-set-up-additional-district-court-in-Valliyoor

நெல்லை மாவட்டம் இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வள்ளியூரில் புதிய கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சபாநாயகர் மு. அப்பாவுவின் தொடர் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக ரூ. 1.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 13 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வள்ளியூரில் ஏற்கனவே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. ராதாபுரம், நாங்குநேரி மற்றும் திசையன்விளை ஆகிய மூன்று தாலுக்காக்களைச் சேர்ந்த பொதுமக்கள் நெல்லையில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்றுவர சுமார் 80 முதல் 100 கி.மீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மூன்று தாலுகாக்களுக்கும் மத்தியில் வள்ளியூர் அமைந்திருப்பதாலும், இங்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க தேவையான கட்டிட வசதிகள் இருப்பதாலும், இங்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைப்பது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என இப்பகுதி வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சபாநாயகர் மு. அப்பாவு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், சபாநாயகரின் கோரிக்கையை ஏற்று, தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், கடந்த ஏப்ரல் 4-ம் தேதி சட்டத்துறை அமைச்சர், வள்ளியூரில் புதியதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும், அதற்கு தேவையான பணியிடங்கள் மற்றும் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை (நீதிமன்றங்கள்-III) அறிவிப்பு எண் ந.க. (எம்.எஸ்.) 270, தேதி 11.06.2025) வெளியிட்டுள்ளது. இந்த நீதிமன்றத்திற்காக ரூ. 1.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட நீதிபதி, கிளார்க், உதவியாளர், ஸ்டெனோ, டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 13 புதிய பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் விரைவில் தொடங்கப்படுவதற்கு நீதித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தனது கோரிக்கையை ஏற்று வள்ளியூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டதற்காக, சபாநாயகர் மு. அப்பாவு தனது சார்பிலும், மாவட்ட மக்கள் சார்பாகவும், வழக்கறிஞர்கள் சார்பாகவும் தமிழக முதலமைச்சருக்கும், சட்டத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.