
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பேட்டியின்போது, முருக பக்தர்கள் மாநாடு, தமிழக அரசின் செயல்பாடுகள், மத்திய அரசின் திட்டங்கள், தமிழ் மொழி அரசியல் மற்றும் வரவிருக்கும் தேர்தல்களுக்கான கூட்டணி வியூகங்கள் குறித்துப் பல்வேறு அனல்பறக்கும் கருத்துக்களை முன்வைத்தார்.
முருக பக்த மாநாட்டிற்கு இ-பாஸ் நடைமுறையை நீதிமன்றம் ரத்து செய்தது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், தமிழக அரசிடம் நீதி கிடைக்கவில்லை, நீதிமன்றம் மூலம் எங்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. முருக பக்தி மாநாடு மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதில் கட்சிப் பேதமின்றி முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.
கீழடி விவகாரத்தில் மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களைத்தான் மாநில அரசு 'ஸ்டிக்கர்' ஒட்டி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் சிலர் தமிழை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருப்பதாகவும், "தமிழைத் தவிர இவர்களுக்கு வேறு ஏதும் தெரியாது. தமிழ் உலகத்திலேயே சிறந்த மொழி. கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த குடி. தமிழை வைத்து இன்னும் இவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திருக்குறளை 63 மொழிகளில் மத்திய அரசுதான் மொழிபெயர்த்தது. ஐநாவில் மோடி தமிழ் மொழி பற்றி பேசியிருக்கிறார். அண்டை மாநிலங்களுக்குச் சென்றாலும் மோடி தமிழைப் பற்றி பேசுகிறார் . மத்திய அரசு திருநெல்வேலி மாநகராட்சிக்கு 900 கோடி கொடுத்தது. இவர்கள் அந்த பணத்தை என்ன செய்தார்கள்? . விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூட்டணியில் சீட்டைப் பற்றி கவலை இல்லை கூட்டணி தொடர்வோம் என்கிறார். வரும் தேர்தலில் இரண்டு சீட்டு வாங்கிட்டு தொடர்வார்களா? . இதற்கு திருமாவளவன் பதில் அளிக்க வேண்டும்.
பாஜக கூட்டணிக்கு பிற கட்சிகள் வருவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது. இன்னும் பத்து மாத கால அவகாசம் இருக்கிறது. வலுவான கூட்டணியாக இருப்பதுதான் எங்களது இலக்கு. நான்கு ஆண்டு சாதனைகளைக் குறித்து மக்களிடம் பேசாமல், எதிர்க்கட்சி பற்றியும் கூட்டணி பற்றியும் பேசி 'புலி வருது புலி வருது எல்லாரும் எங்கள் மீது வந்து படுத்துக் கொள்ளுங்கள்' என்பது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.