
நெல்லை மாநகர பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிள்கள் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் மோட்டார் சைக்கிள் திருடர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாநகரில் திருட்டு நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்ததில் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஆலங்குளம் மங்கம்மாள் சாலை தெருவை சேர்ந்த முத்து செல்வம் மகன் பிரபாகர ராஜா(வயது 29), அதே பகுதியை சேர்ந்த ராசையா மகன் இசக்கிமுத்து (25), ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தை மணிமேடை தெருவை சேர்ந்த சரவணன்(45) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் பாளையங்கோட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. அந்த வாகனங்கள் மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து திருடப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து கைதான 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.