ராதாபுரம் கால்வாய் பாசனத்தால் பயன்பெறும் கடைமடை குளமான ராதாபுரத்தின் அருகேயுள்ள மகேந்திரபுரம் குளம், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த ராதாபுரம் கால்வாய் முழுமையாகச் சீரமைக்கப்பட்டதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது. முன்னதாக, ராதாபுரம் கால்வாய் பல இடங்களில் தூர்வாரப்படாமல் இருந்ததால், கடைமடை பகுதிகளுக்குத் தண்ணீர் ஒழுங்காக வந்து சேரவில்லை என விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இதன் காரணமாக, 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட மகேந்திரபுரம் குளம் வறண்டு கிடந்தது. இதனால் தங்கள் நிலங்களுக்குப் போதிய நீர் கிடைக்காமல், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர் இதுகுறித்துத் தெரிவிக்கையில், "சுமார் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் இந்தக் குளம் நிரம்பியதன் மூலம் பயன் பெறும். இது அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்" என்றார்.
தமிழக சட்டப்பேரவை சபாநாயகரும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமானஅப்பாவு எடுத்த துரித முயற்சிகளாலேயே ராதாபுரம் கால்வாய் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு, மகேந்திரபுரம் குளத்திற்குத் தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதாக விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். சபாநாயகரின் முயற்சிக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு, அரசுத் திட்டங்கள் உரிய முறையில் செயல்படுத்தப்படும்போது, அதன் பலன் நேரடியாக விவசாயிகளையும், பொதுமக்களையும் சென்றடையும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மகேந்திரபுரம் குளம் நிரம்பியதால், இந்த ஆண்டு நல்ல விளைச்சல் ஏற்படும் என்று அந்த பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.









.jpg)
