திமுக ஐடி விங் செயலாளர் டிஆர்பி ராஜாவைக் கண்டித்து, திருநெல்வேலி மாநகர் முழுவதும் அதிமுகவினர் ஒட்டியுள்ள கண்டனச் சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை கார்ட்டூன் மூலம் அவமதித்தததை கண்டித்து இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 20-ஆம் தேதி, இது தொடர்பாக நெல்லை அதிமுக மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் தச்சை. கணேச ராஜா தலைமையில், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், டிஆர்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது அதிமுகவினர் நெல்லை நகரம் முழுவதும் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் வி.கே.பி சங்கர், டிஆர்பி ராஜாவைக் கண்டித்து நெல்லை மாநகர் முழுவதும் கண்டனச் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையேயான வார்த்தைப் போர் தொடர்ந்து வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை கார்ட்டூன் மூலம் விமர்சித்தது அரசியல் நாகரிகமற்ற செயல் எனப் பல தரப்பினரும் கண்டித்துள்ளனர்.










