தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கீழநவலடிவிளையைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சந்தனமாரி (50). இந்த தம்பதியின் மகன் இசக்கி ராஜா (28). நேற்று காலை சந்தனமாரி தனது மகன் இசக்கி ராஜாவுடன் பைக்கில் திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள கோயிலுக்கு குறி கேட்பதற்காக சென்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஆறுமுகநேரி சென்று கொண்டிருந்தனர்.
தாயும் மகனும் சென்ற இரு சக்கரவாகனம் திருநெல்வேலி}திருச்செந்தூர் சாலையில் உள்ள புவியியல் ஆராய்ச்சி மையம் அருகே சாலையின் ஓரத்தில் இருந்த கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சந்தனமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அங்கிருந்தவர்கள் இசக்கிராஜாவை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் இசக்கி ராஜாவும் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிவந்திப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.










