பெண் விவகாரத்தில் இளைஞர்களுக்குள் மோதல்: நெல்லையில் போலீஸ்காரருக்கு வெட்டு விழுந்த பின்னணி

conflict-between-youths-over-a-woman-s-issue-policeman-being-slashed

நெல்லை மேலப்பாளையம் அத்தியடி மேலத்தெருவை சேர்ந்தவர் முகமது ரஹ்மத்துல்லா (வயது 28). இவர் தமிழ்நாடு காவல் துறையில் மணிமுத்தாறு 9-வது சிறப்பு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 6 மாத கைக்குழந்தை உள்ளது. தற்போது விடுமுறையை ஒட்டி ரஹ்மத்துல்லா வீட்டுக்கு வந்துள்ளார். இவர், நேற்று இரவு தனது மனைவியுடன் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் உள்ள குழந்தைகள் பூங்காவுக்கு சென்றார்.

நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் குடும்பத்தினருடன் அங்கு வந்திருந்தனர். பூங்காவில் சிறுவர்கள் உள்பட 5 பேர் கும்பலாக நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். ஒருவரை யொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதனை கண்ட போலீஸ்காரர் ரஹ்மத்துல்லா அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு ரஹ்மத் துல்லாவை கடுமையாக பேசியதோடு தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினர். இதை பார்த்து, அவரின் மனைவி அலறினார். சத்தம் பேட்டு பொதுமக்கள் பார்த்து ஓடி வரவே, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

கையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ரஹ்மத்துல்லா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். தகவல் அறிந்து பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் தலைமை
யில் போலீசார்ரஹ்மத்துல்லாவை மீட்டு நெல்லை அரசு மருத்துசமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து , அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் , சிறுவன் உள்பட 5 பேர் கும்பல் ரஹ்மத்துல்லாவை வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு பகுதியை சேர்ந்த ஹரிஷ்(21), பாளை இலந்தைகுளம் பகுதியை சேர்ந்த மதன்(19), பார்த்திபன் (20), பாளை மார்க்கெட் பகுதியை சேர்ந்த தினேஷ்(24) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, நெல்லை போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் வினோத் சாந்தாராம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் காசி பாண்டியன், பொன்ராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் 2 குழுக்களாக பிரிந்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். போலீஸ்காரரை வெட்டிய இளைஞர்கள் குலவணிகர்புரம் பகுதியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து ,இரவோடு இரவாக சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், பெண் விவகாரத்தில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதும், அதனை தடுக்க முயன்ற போலீஸ்காரருக்கும் வெட்டு விழுந்தது தெரிய வந்தது.