திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் ஆணையாளர்... யார் இந்த மோனிகா ரானா ?

nellai-corporation-first-woman-commissioner-monka-rana

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையாளராக மோனிகா ரானா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக பெண் ஒருவர் பொறுப்பேற்பது இதுவே முதன்முறை.

ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த மோனிகா ரானா , கடந்த 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். 2010 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த திறமையான அதிகாரி ஆவார். சிவில் சர்வீஸ் தேர்வில் 70வது இடத்தைப் பிடித்தவர்.

மோனிகா ரானா வணிகவியலில் இளங்கலை பட்டமும் (Bachelor of Commerce), பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும் (Master of Arts in Economics) பெற்றுள்ளார். ஆசிரியையாக இருந்து ஐ.ஏ.எஸ் அரிகாரி ஆனவர். இவரது தந்தை ஒரு ஐ.எஃப்.எஸ் (IFS) அதிகாரி ஆவார் . திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, மோனிகா ரானா தமிழகத்தின் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் (Bahraich) மாவட்டத்தில் "ஆபரேஷன் பேடியா" (Operation Bhediya) போன்ற பல்வேறு சமூக நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய அனுபவமும் இவருக்கு உண்டு. இவரின், பரந்த அனுபவம், நிர்வாகத் திறன் போன்றவை திருநெல்வேலி மாநகரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என தாராளமாக நம்பலாம்.

திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் ஆணையாளராக மோனிகா ரானா பொறுப்பேற்கும் நிலையில், தூய்மைப் பணிகள், உட்கட்டமைப்பு மேம்பாடு, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், மக்கள் நல திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துதல் போன்ற பல்வேறு துறைகளில் அவரது தலைமை பண்பு நிமிரும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

இதற்கு முன்பு திருநெல்வேலி மாநகராட்சியில் பானுமதி, லட்சுமி, விஜயலட்சுமி என மூன்று பெண் கமிஷனர்கள் பணியாற்றியுள்ளனர்...
ஆனால், இவர்களில் யாரும் நேரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இல்லை.