இரவு நேரத்தில் ஓடும் ரயிலில் பயணியிடம் கைவரிசை காட்டிய இளைஞர்களை சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கைது செய்த நெல்லை மாவட்ட ரயில்வே காவல்துறையினர் 2 ½ லட்சம் ரொக்க பணம் 5 பவுன் தங்க நகையும் மீட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் . இவர் கனிமவளத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னையில் வசிக்கும் இவர் மனைவி மற்றும் மகளுடன் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 18ம் தேதி இரவு சென்னையில் இருந்த நாகர்கோவில் சென்றுள்ளார் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்த சுந்தர்ராஜ் தனது உடைமைகளை இருக்கையின் அடியில் வைத்திருந்துள்ளார்.
மதுரை ரயில் நிலையம் வந்தபோது இருக்கையின் அடியில் இருந்த பெட்டிகளை சரிபார்த்துள்ளார். அனைத்தும் சரியாக இருந்துள்ளது. ஆனால், திருநெல்வேலி ரயில் நிலையம் வந்து பார்த்தபோது இருக்கையின் அடியில் வைத்த உடமைகளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த சுந்தர்ராஜ் இது குறித்து நெல்லை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .
இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். திருடர்களை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடினர். திருநெல்வேலி விருதுநகர், மதுரை ,கோவில்பட்டி என பல்வேறு ரயில் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர் .
தொடர்ந்து , ஓடும் ரயிலில் திருட்டில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்த பாரதி மற்றும் சூர்யா ஆகியோரை கைது செய்தனர். பின்னர், அவர்களிடம்இஇருந்த ரொக்க பணம் மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.










