மாஞ்சோலைப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய உயர்மட்ட குழுவினர் மாஞ்சோலை சென்று இன்று ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குள் மாஞ்சோலை பகுதி அமைந்துள்ளது. இங்கு மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் 100 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து தேயிலை பயிரிட்டது. வரும் 2028- ம் ஆண்டுடன் குத்தகை காலம் முடிவடைகிறது. எனினும், அந்த நிறுவனம் முன்னதாகவே தேயிலை உற்பத்தியை நிறுத்திவிட்டு தொழிற்சாலையை காலி செய்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனபகுதியாக அறிவிக்கப்பட்டதால், அங்கு வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
மாஞ்சோலை வனப்பகுதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கீழ் வருவதால் அதனை முற்றிலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆராயப்பட்டு வருகிறது.இதற்காக இன்று ( ஜூன் 24) மாஞ்சோலை பகுதிகளில் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய உயர்மட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
குழு தலைவர் சித்தாந்த தாஸ், மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார், தலைமையில் உறுப்பினர்கள் சந்திர பிரகாஷ் கோயல் , ஜெ.ஆர்.பட், சுனில் லிமாயிஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தனியார் நிர்வாகத்தால் ஒப்படைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தின் வனப்பகுதியின் தற்போதைய நிலை முக்கியமாக ஆய்வு செய்யப்பட்டது.
வனப்பகுதியில் வழக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், பாதுகாப்பு நடைமுறை சிக்கல்களையும் அதற்கு ஏற்ற தீர்வுகளையும் ஆராய்ந்தனர்.










