திருநெல்வேலியில் நடைபெற்ற 9-வது ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டியில், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி கோவை கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திவெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. சச்சின் பி (24 ரன்கள்), ஆண்ட்ரே சித்தார்த் (21 ரன்கள்), மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் (21 ரன்கள்) ஆகியோர் கோவை கிங்ஸ் அணிக்காக ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தரப்பில் இசக்கிமுத்து 4 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டி. நடராஜன் மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதில், இசக்கி முத்து திருநேல்வேலி மாவட்டம் மானுர் அருகேயுள்ள களக்குடி கிராமத்தை சேர்ந்தவர். அவர் விளையாடுவதை அறிந்த களக்குடி மக்கள் நேற்று ஏராளமானோர் போட்டியை காண வந்திருந்தனர். மைதானத்தில் கோஷமிட்டு அவரை உற்சாகப்படுத்தினர். ஏராளமான குழந்தைகளும் போட்டியை கண்டு ரசித்தனர்.
138 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி, அமித் சாத்விக்கின் (47 பந்துகளில் 66 ரன்கள்) அதிரடி அரைசதத்தால் 16.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. சாய் கிஷோர் (24 ரன்கள்) மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் (21 ரன்கள்) ஆகியோரும் திருப்பூர் அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர்.
கோவை கிங்ஸ் பந்துவீச்சில் ரமேஷ் திவாகர், ஜாதவேத் சுப்ரமணியன், மற்றும் பி. புவனேஸ்வரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். கோவை கிங்ஸ் அணி சந்தித்த ஆறு போட்டிகளில் இது ஐந்தாவது தோல்வி ஆகும். அந்த அணி தொடரில் இருந்து வெளியேறி விட்டது.
போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இசக்கிமுத்து, ஸ்ரீராம் கேபிட்டல் ஆட்டநாயகன் விருதை வென்றார். "சொந்த மண்ணில் ஆட்டநாயகன் விருதை வெல்வது எனது கனவாக இருந்தது. அது இப்போது நிறைவேறியதில் மகிழ்ச்சி" என்று இசக்கிமுத்து தெரிவித்தார்.











