கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு புறக்கணிப்பு? - 1999 ம் ஆண்டு ஒப்பந்தம் மீறல்

Denial-of-employment-opportunities-to-local-youth-at-Kudankulam-Nuclear-Power-Plant

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 'சி' பிரிவு மற்றும் தற்காலிகப் பணியிடங்களை நிரப்ப, நிலம் வழங்கியவர்களின் வாரிசுகள் மற்றும் உள்ளூர் இளைஞர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என சபாநாயகரும் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு, அணுசக்தி துறைத் தலைவருக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்.

1999ஆம் ஆண்டு ஒப்பந்தம் கூறுவது என்ன?

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் திட்டத்திற்காக நிலம் வழங்கியவர்களின் வாரிசுகள் மற்றும் பாதிக்கப்பட்ட உள்ளூர் இளைஞர்களுக்கு 'சி' பிரிவு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என 1999ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி மும்பை அணுமின் திட்ட பணியாளர் குழு இயக்குனர், நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் அப்போதைய ராதாபுரம் தொகுதி எம்எல்ஏ அப்பாவு ஆகியோர் முன்னிலையில் ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி, 'சி' பிரிவு பணியிடங்கள் நிரப்பப்படும் போது, முதலில் நிலம் வழங்கியவர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில், பாதிக்கப்பட்ட ஊராட்சிகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதிலும் தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதிலும் , தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில்தான் எழுத்துத் தேர்வு மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் நியமனங்கள் முறையாக நடந்தது. அப்போது, பணி வாய்ப்பு பெற்றவர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நிரந்தரமாகப் பணியாற்றி வருகின்றனர். ஆனால், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த ஒப்பந்தம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டில் 117 'சி' பிரிவு பதவிகளுக்கும் 62 'பி' பிரிவு பதவிகளுக்கும் எழுத்துத் தேர்வு நடத்தி நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், நிலம் வழங்கியவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் உள்ளூர் இளைஞர்களுக்குத் தற்காலிகப் பணியிடங்களுக்கான வாய்ப்பில்கூட பரிசீலிக்கப்படவில்லை. இதனால், கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக, 2024 மார்ச் 2ஆம் தேதி நடந்த சமரசப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், மார்ச் 3ஆம் தேதி நடைபெற இருந்த எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

சபாநாயகர் அப்பாவுவின் கோரிக்கை:

தற்போது, குறிப்பிட்ட இந்த பணி வாய்ப்புக்கு 62 தொழில்நுட்ப பணியாளர்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகத் தேர்ந்தெடுப்பது குறித்து, அணுசக்தி துறையின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அப்பாவு அணு சக்தி துறை தலைவருகு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, ' இப்படி பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை 1999ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு எதிரானது. வெளிமாநிலத்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் அளித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, இதன் மூலம் வேலை பெற முயற்சிக்கின்றனர்.

எனவே, குறிப்பிட்ட கால பணிக்கான 62 தொழில்நுட்பப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில், திட்டத்திற்கு நிலம் வழங்கியவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும் . அவர்களை இரண்டு ஆண்டுகள் முடிந்தபின்பு பணிநீக்கம் செய்யாமல், தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும். 2018ஆம் ஆண்டு ஏற்கெனவே எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட 117 'சி' பிரிவு பணியிடங்களையும் மேற்கூறிய முறையில் தான் நிரப்ப வேண்டும் .

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.