.jpg)
பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் மெயின் ரோட்டில், முறையாக முடிக்கப்படாத கழிவுநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க கோரி வியாபாரிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (ஐகிரவுண்ட் மருத்துவமனை) பிரதான நுழைவுவாயில் எதிரில் உள்ள கடைகளில் இருந்து கழிவுநீர், வெளியேற முறையான கால்வாய் இல்லை. இதனால், கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வாக, கடைகளுக்கு முன் 66 மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.
ஆனால், இந்த கால்வாய் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்படாததால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், சில நாட்களில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் மீண்டும் மெயின் ரோட்டில் ஓடியுள்ளது. சில இடங்களில் மூடிகளும் அமைக்கப்படாததால், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த வியாபாரிகள் பாளையங்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐகிரவுண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், நெடுஞ்சாலைத்துறை உதவி இன்ஜீனியர் ராஜேந்திரன் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த 24 மணி நேரத்தில் வாறுகால் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டு கழிவுநீர் சீராகச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் மறியலை கைவிட்டனர்.