
கோவில்பட்டி அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக நேற்று (ஜூன் 24) நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்த ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைந்தன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.வழக்கமாக இரவு 7:35 மணிக்கு நெல்லை சந்திப்புக்கு வர வேண்டிய ஈரோடு - நாகர்கோவில் முன்பதிவில்லா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், சிக்னல் கோளாறு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக இரவு 9:35 மணிக்கு வந்தடைந்தது. அதேபோல, பனாரஸ் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் காசி தமிழ்ச் சங்கமம் ரயில் மாலை 6:25 மணிக்கு பதிலாக, சுமார் 3.5 மணி நேரம் தாமதமாக இரவு 9:55 மணிக்கு நெல்லை வந்தடைந்தது.
மேலும், இரவு 8:35 மணிக்கு வர வேண்டிய ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக இரவு 10:30 மணிக்கும், இரவு 9 மணிக்கு வர வேண்டிய சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக இரவு 11 மணிக்கும் நெல்லை வந்தடைந்தன.
இந்த திடீர் தாமதத்தால் ரயில்களில் பயணம் செய்த பயணிகள், குறிப்பாக முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்திற்குள்ளானார்கள். ரயில்வே நிர்வாகம் சிக்னல் கோளாறை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.