பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பையும் துண்டித்து விட்டனர்... மத்திய குழுவிடம் மாஞ்சோலை மக்கள் கண்ணீர்

BSNL-has-also-disconnected-telecommunications-Manjolai-people-complaints-to-central-committee

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை பகுதி, தற்போது இருமுனை சிக்கலைச் சந்தித்து வருகிறது. அங்கு, வசிக்கும் பொதுமக்கள், நான்கு மாதங்களுக்கும் மேலாகத் தொலைத்தொடர்பு வசதியின்றி, அடிப்படைத் தேவைகளுக்கும், மருத்துவ வசதிகளுக்கும் போராடி வருகின்றனர். மறுபுறம், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய உயர்மட்டக் குழு, மாஞ்சோலைப் பகுதியை முழுமையாகப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், நூறு ஆண்டுகளாக மாஞ்சோலையில் தேயிலைத் தோட்டங்களை குத்தகைக்கு எடுத்து தொழிற்சாலை நடத்தி வந்தது. 2028-ஆம் ஆண்டுடன் குத்தகை காலம் முடியவிருந்த நிலையில், அந்நிறுவனம் முன்னதாகவே தேயிலை உற்பத்தியை நிறுத்தி, தொழிற்சாலையைக் காலி செய்துள்ளது. இதனால், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், தமிழ்நாடு அரசு, மாஞ்சோலை வனப்பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்துள்ளது.

மத்திய உயர்மட்டக் குழுவின் ஆய்வு

இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மத்திய உயர்மட்டக் குழுவினர், நேற்று மாஞ்சோலை பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது, மத்திய குழுவிடத்தில் மாஞ்சோலை கிராமங்களான காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்களுக்கு கடந்த நான்கு மாதங்களாகத் தொலைத்தொடர்பு வசதி இல்லை . பி.எஸ்.என்.எல். நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைச் சரிசெய்ய வரும் அதிகாரிகளைத் தோட்ட நிர்வாகத்தினர் தடுக்கின்றனர். இதனால் , அத்தியாவசியத் தேவைக்கு கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அரசு அதிகாரிகள் தங்களை வெளியேற்ற நிர்பந்திக்கக் கூடாது ' என்று தெரிவித்துள்ளனர். .