சொக்கலிங்கநாதர் கோயில் கும்பாபிஷேக விவகாரம் ... பாளையங்கோட்டையில் பெண்கள் உள்பட 10 சிவ பக்தர்கள் கைது

10-devotees-arrested-in-palayamkottai


பாளையங்கோட்டையிலுள்ள சொக்கலிங்கநாதர் சுவாமி சிவன் கோயிலில் இன்று ( ஜூன் 25)கும்பாபிஷேக விழாவிற்கு பந்தக்கால் நடப்படவிருந்தது. அப்போது, அங்கு ஏற்பட்ட தகராறில் 4 பெண்கள் உட்பட 10 சிவ பக்தர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பாளையங்கோட்டை சொக்கலிங்க சாமி தெருவில் அமைந்துள்ள இந்த பழைமையான சிவன் கோயிலில் சிவ பக்தர்கள் கும்பாபிஷேகம் நடத்த இன்று பந்தக்கால் நடும் பணியில் ஈடுபடத் தயாரக இருந்தனர். இதற்காக ,விநாயகர் சன்னிதி முன் பந்தக்கால் நட அவர்கள் முயன்றனர்.

அதே வளாகத்திலுள்ள ஐயா கோயில் நிர்வாகத்தினர், சிவ பக்தர்களை நீதிமன்ற நிபந்தனைகளின் படி வழிபாடு நடத்த வேண்டும் . பந்தக்கால் நட நீதிமன்றம் அனுமதி வழங்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.எனினும், நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே காணப்பட்டது. இதனையடுத்து, 4 பெண்கள் உள்பட 10 சிவ பக்தர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பாளையங்கோட்டை சமாதானபுரம் செல்லும் சாலையில் போலீஸ் வேனில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது. பின்னர் அவர்கள் நீதிமன்றனம் அருகேயுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.