போதைப்பழக்கம் ஹீரோயிசம் அல்ல,கோழைத்தனம் - நெல்லை துணை ஆணையாளர் விநோத் சாந்தாராம் அறிவுரை

anti-drug-meetting-in-nellai

இளைஞர்கள் மத்தியிலுள்ள போதைப்பழக்கம் அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பதுடன் வாழ்க்கையையும் சீரழித்து விடுகிறது என்று நெல்லை மாநகர காவல் துணை கமிஷனர் விநோத் சாந்தாராம் பேசினார்.உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நெல்லை மாநகர காவல்துறை, மாவட்ட இளையோர் மையம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடந்தது.நெல்லை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஆரவிந்தரன் கருத்தரங்கத்துக்கு தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அப்துல் காதர், மாணவர் நலன் முதல்வர் மாகாதேவன், மாவட்ட இளையோர் அலுவலர் கோமல் நிஷாம் மற்றும் மையூராத் ஆலோசனை குழு உறுப்பினர் மிதார் முகதின் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் ஏற்றுக் கொண்டனர். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நெல்லை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார் பேசுகையில், "தமிழகத்தில் 12-ம் வகுப்பு முடித்த அனைவரும் அடுத்த கட்ட உயர் கல்விக்குச் செல்கின்றனர். வட மாநிலங்களில் இந்த நிலை இல்லை. உயர் கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் நம் மாநிலத்தின் ஜிடிபி உயர்ந்துள்ளது. மாணவர்கள் கல்லூரிப் படிப்போடு மட்டுமல்லாமல் நிறைய புத்தகங்களை வாசிக்க வேண்டும். எழுத்தாளர்கள் வண்ணதாசன் மற்றும் வண்ணநிலவன் போன்றோரின் படைப்புகள் இந்த மண்ணின் பெருமையை உணர்த்தும். போதை மருத்து பயன்படுத்துவது குறித்து அறிந்தால் கட்டணமில்லா எண் 1933ல் தெரியப்படுத்த வேண்டும் ''என்றார்.

அதைத்தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை திருநெல்வேலி துணை ஆணையர் வினோத் சந்தாராம் தொடங்கி வைத்து பேசுகையில், "கல்லூரிகள் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால், சில இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, தங்கள் உடல்நலத்தையும், எதிர்காலத்தையும் பாழாக்கிக் கொள்கின்றனர்.
போதைப்பழக்கம் என்பது ஒரு ஹீரோயிசம் கிடையாது. அது ஒரு கோழைத்தனம். இந்தப் பழக்கத்திற்கு அடிமையாகும் ஒரு இளைஞர், தனது குடும்பத்திற்கே பெரும் சுமையாக மாறிவிடுகிறார்.

இதனால் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் மற்றும் சமூகத்தில் அவமதிப்பு ஏற்படுகிறது.எனவே, இளைஞர்கள் தேவையற்ற பழக்கங்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து, நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும்," என்று பேசினார்.

இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஜெனட் ராணி நன்றி கூறினார்.