விளம்பரப்பைக்கு ரூ.20 வசூல் சிக்கிய நெல்லை ஸ்வீட் நிறுவனம் ...ரூ. 15,020 இழப்பீடு வழங்க உத்தரவு

20-rupees-collected-for-advertising-bag-court-oredred-Nellai-Sweet-Company-to-pay-compensation-Rs-15-020

விளம்பரப்பைக்கு ரூ.20 வசூலித்த ராம் லாலா ஸ்வீட் நிறுவனத்துக்கு ரூ.15,020 வாடிக்கையாளருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

நெல்லை, பாளையங்கோட்டை தாலுகா பர்கிட் மாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பரமசிவம் என்பவர் பாளையங்கோடையிலுள்ள ராம் லாலா ஸ்வீட் நிறுவனத்தில் ரூ.420க்கு இனிப்பு பண்டங்கள் வாங்கியுள்ளார். அப்போது அந்த நிறுவனம், தனது விளம்பரம் அச்சிடப்பட்ட காகிதப்பைக்கு கூடுதலாக ரூ.20 வாங்கியுள்ளது.

இதையடுத்து, வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் பரமசிவம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணையத்தின் தலைவர் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், விளம்பரப்படுத்தப்பட்ட காகிதப்பைக்கு ரூ.20 வசூலித்தது சேவை குறைபாடு என கூறி, பரமசிவத்திற்கு ஏற்பட்ட மன மன உளைச்சலுக்கு ரூ.10,000/- வழங்க உத்தரவிட்டனர்.

இதனை எதிர்த்து ராம் லாலா நிறுவனம் மதுரை மாநில நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில ஆணையம், வழக்கை மீண்டும் நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தை யே விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், வழக்கு மீண்டும் நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தபோது, நிர்வாக காரணங்களால் கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு நடைபெற்ற விசாரணையில் தலைவர் பிறவி பெருமாள் மற்றும் உறுப்பினர் சண்முக பிரியா ஆகியோர், ராம் லாலா ஸ்வீட்ஸ் நிறுவனம் வழக்கறிஞர் பரமசிவத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.10,000 வழக்குச் செலவாக ரூ.5,000 மற்றும் விளம்பரப்பைக்கான செலவு ரூ.20 என மொத்தம் ரூ.15,020 வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

விளம்பரம் அச்சிடாப்படாத பையாக இருந்தால், ராம் லல்லா நிறுவனம் தப்பித்திருக்கும்.