தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள வீராணபுரம் கீழ தெருவை சேர்ந்தவர் சன்னாசி (65). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் கால் வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சன்னாசி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் அருகே உள்ள ஆணையார்குளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற ரகுநாத் (64). இவரது அண்ணன் பண்டாரம் மகன் ஆனந்தராஜ் (42). இரு குடும்பத்தினரிடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அவர்களிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, இருவரும் கம்பு மற்றும் கற்களால் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்தவர்கள் பெருமாள்புரம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியை அடுத்த தேவர்குளம் அருகேயுள்ள பன்னீர்ஊத்து கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டைத்தாய் (60). இவர் தனது 7 பவுன் நகையை வீட்டின் பீரோவில் வைத்திருந்தார். இந்த நகையை ஏதாவது விஷேச நிகழ்ச்சிக்கு செல்லும்போது அணிந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு சுபநிகழ்ச்சிக்கு செல்வதற்காக நகையை அணியை பீரோவை திறந்துள்ளார் , அப்போது அங்கு வைத்திருந்த 7 பவுன் நகை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீடு முழுவதும் தேடியும் நகையை காணவில்லை. இதுகுறித்து கோட்டைத்தாய் தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வெட்டூர்ணிமடம் கட்டளையன்விளை பகுதியை சேர்ந்தவர் சேகர் (65). இவர் நாங்குநேரி பகுதிக்கு வந்துள்ளார். அங்குள்ள, தாலுகா அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது , அந்த வழியாக வந்த வேன் சேகர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சேகர் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சேகர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










