தமிழகத்தில் உள்ள அனுமதியற்ற மனைப் பிரிவுகளை முறைப்படுத்தும் பணிகள் ஜூலை 1ம் தேதி முதல் ஆன்லைனில் தொடங்கவுள்ளதாக நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, 2025-2026 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சம் இது. அதன்படி, 20.10.2016 தேதி வரை அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், அதே தேதிக்கு முன் தனி மனையாகப் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, எந்தக் காலக்கெடுவும் இல்லாமல் மனுக்கள் பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும். இந்த வகையில் பதிவு செய்ய விரும்புபவர்கள் ஜூலை 1, 2025 முதல் www.onlineapp.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
மேலும், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட அனைத்து அனுமதியற்ற மனைப் பிரிவுகளையும் வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளுடன், ஜூன் 30, 2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பொதுமக்கள் ஜூலை 1, 2025 முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
இதுமட்டுமல்லாமல், மலைப் பிரதேசங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்குப் பதிலாக, ஜூலை 1, 2025 முதல் நவம்பர் 30, 2025 வரை www.tcponline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நீண்ட காலமாக அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் நிலம் வைத்திருக்கும் பொதுமக்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது.









.jpg)
.jpg)