தரம் குறைந்த உணவுப் பொருட்கள் பாளையங்கோட்டை நட்ஸ் அண்ட் சாக்கோஸ் உரிமம் ரத்து

low-quality-food-products-palayankottai-nuts-and-chocos-license-cancelled

பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள "நட்ஸ் அண்ட் சாக்கோஸ்" கிளையில், ஒரு வாடிக்கையாளர் பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் கிஸ்மிஸ் பழங்கள் உட்பட ரூ. 2,198 மதிப்புள்ள பொருட்களை வாங்கியுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ஐந்து கிலோ முந்திரிப் பருப்பில் புழுக்கள் நெளிந்ததைக் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக, அந்த வாடிக்கையாளர் அந்த உணவுப் பொருட்களைக் கடைக்குத் திரும்பக் கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பாக, வாடிக்கையாளர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது .இந்தச் சம்பவம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் புகார் அளித்தார். தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சிவசுப்பிரமணியன், மகாராஜன், சங்கரநாராயணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் உடனடியாக அந்தப் பேக்கரியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில், பேக்கரியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த முந்திரிப் பருப்பு, அத்திப் பழம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் தரம் குறைந்து, உண்ணத் தகுதியற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பான ஆய்வறிக்கையும் அளிக்கப்பட்டது.

ஆய்வறிக்கையின் அடிப்படையில், டாக்டர் புஷ்பராஜின் உத்தரவின் பேரில், அந்தப் பேக்கரியின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், "பேக்கரியிலுள்ள தரமற்ற பொருட்களை உடனடியாக அகற்றிவிட்டு, தரமான புதிய பொருட்களை மட்டுமே விற்பனைக்கு வைக்க வேண்டும். பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, அது குறித்த அறிக்கையை உணவுப் பாதுகாப்புத் துறைக்குச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னரே, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு, பேக்கரியின் தற்காலிக ரத்து திரும்பப் பெறப்படும்" என்று கூறினர்.