அம்பாசமுத்திரம் நகராட்சி கூட்டத்தில், அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை என கூறி, அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த நான்கு வருடங்களாகத் தெருவிளக்குகள் அமைப்பதற்கான கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏழு வருடங்களாக எந்தவொரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை . கவுன்சிலர்களுக்குத் திட்டத் தீர்மானங்கள், டெண்டர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் செலவினங்கள் குறித்த எந்த விவரமும் தெரிவிக்கப்படுவதில்லை இதனால் மக்களுக்குப் பதிலளிக்க முடியவில்லை .
தூய்மைப் பணிகள் முறையாக நடைபெறவில்லை . ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் குறித்த கேள்விக்கு எந்தப் பதிலும் இல்லை. குப்பைகள் அள்ளப்படாமல் ஆங்காங்கே குவிக்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பள்ளி அருகே குப்பைகள் எரிக்கப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நகராட்சி ஆணையாளர் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஆட்களின் அடிப்படையில் பணியாளர்கள் வேலை பார்ப்பதில்லை.குப்பைகளை ஒழுங்காக அள்ளாமல், தீ வைத்து எரித்து சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கின்றனர். 48 மின் விளக்குகள் பொருத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ஒரு விளக்கு கூட எங்கள் பகுதியில் பொருத்தப்படவில்லை என்று கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், அம்பாசமுத்திரம் நகரம் முழுவதும் குப்பைகள் குவிந்து நாறிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 10 நாட்களாகத் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகப் பணிகளுக்காக அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. அம்பாசமுத்திரத்தில் பணியாற்ற வேண்டியவர்களைத் திருச்செந்தூருக்கு அனுப்பியது ஏன்? அம்பாசமுத்திரத்தைப் புறக்கணித்துவிட்டு திருச்செந்தூருக்குச் சென்றது ஏன்? என அதிமுக கவுன்சிலர் மாரிமுத்து கடுமையான கேள்வி எழுப்பினார்.
இதை கண்டித்து கூட்டத்தில் இருந்து 1வது வார்டு அதிமுக கவுன்சிலர் மாரிமுத்து மற்றும் 15வது வார்டு அதிமுக கவுன்சிலர் சிவகுமார் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.










