நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 8-ந்தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. உள்ளுர் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி சுவாமி-அம்பாள் உள்ளிட்ட 5 தேர்களை 4 ரதவீதிகளிலும் இழுத்து நிலைக்கு கொண்டு வருவார்கள். இந்த நிலையில், வடக்கு ரதவீதி மற்றும் அதில் இருந்து நெல்லையப்பர் கோவில் வரும் கீழரதவீதிக்கு வரும் சாலைகளில் இருபுறமும் சாலையோர நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பால் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, உடனடியாக, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து 4 ரதவீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தேர்கள் இடையூறின்றி செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து , மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் ரதவீதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் பிரசன்னகுமார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து, வடக்கு மற்றும் கீழ ரதவீதிகளில் இருந்த சாலையோர கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து, நேற்றிரவு தேர் பவனி எந்தவித இடையூறும் இன்றி நடைபெற்றது. வாகன ஓட்டிகளும் சிரமமின்றி சென்றனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைய பக்தர்கள் வெகுவாக பாராட்டினர்.
இதுகுறித்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் பிரசன்னகுமார் கூறுகையில், 'நடைபாதை வியாபாரிகளிடம் விஷயத்தை விளக்கி கூறினோர். அவர்கள் தாங்களாக முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர். இதற்காக உதவி கமிஷனர் அஜிகுமார் தலைமையிலான போலீசார் முயற்சி எடுத்தனர்ல.தேரோட்டம் முடிந்த பின்னரும் நிரந்தரமாக ரதவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வழிவகை செல்வதற்காக மாநகராட்சி கமிஷனரிடமும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.










