அணை நிறைய தண்ணீர்... நெல்லையில் பயிர்களுக்கு மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவலம்

full-of-water-in-the-dam-farmer-isssue-in-nellai

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளபோதும், நெல்லை கால்வாயில் தூர்வாரும் பணி காரணமாக தண்ணீர் திறக்கப்படாததால், பாசன குளங்களுக்கு நீர் வரத்து இல்லாமல் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, நெல்லை அருகேயுள்ள குப்பக்குறிச்சி குளத்திற்கு தண்ணீர் வராததால், விவசாயிகள் தங்கள் நெற்பயிர்களைக் காப்பாற்ற ஆயிரக்கணக்கில் செலவழித்து மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு போன்ற நெல்லை மாவட்டத்தின்முக்கிய அணைகள் தொடர் மழை காரணமாக நிரம்பும் தறுவாயில் உள்ளன. பாபநாசம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கால்வாய்கள் மூலம் குளங்களுக்கும், நேரடி பாசனத்திற்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், நெல்லை கால்வாயில் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதால், அந்தக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால்,நெல்லை கால்வாய் மற்றும் அதன் கிளைக் கால்வாய்கள் மூலம் தண்ணீர் பெறும் குளங்கள், தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதில், குப்பக்குறிச்சி குளமும் அடங்கும். சமீபத்தில் பெய்த மழையால் குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் இருக்கிறது.

குப்பக்குறிச்சி பகுதி விவசாயிகள் ஏற்கனவே கிடைத்த தண்ணீரைப் பயன்படுத்தி நெற்பயிர் நடவு செய்திருந்தனர். தற்போது , பயிர் வளர்ந்து கதிர் பருவத்தை எட்டியுள்ளது, இந்த சமயத்தில் பாசனத்திற்குத் தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குளத்தில் இருக்கும் குறைந்த அளவு தண்ணீரை மோட்டார்கள் மூலம் வயல்களுக்குப் பாய்ச்சுகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால், பாசன குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால், குளத்தில் இருக்கும் தண்ணீரை, மோட்டாரை வாடகைக்கு எடுத்து நெல் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். இதற்கு ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவு செய்ய வேண்டியதுள்ளது. இல்லையெனில் நெல் பயிர்கள் காய்ந்துவிடும்.உடனடியாக குப்பக்குறிச்சி குளத்திற்குத் தண்ணீர் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.