நெல்லையில் ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பரிதாப பலி

boy-dies-after-rambutan-fruit-gets-stuck-in-throat-in-nellai

திருசெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்தவர் நிஜான்.இவரின் 5 வயது மகன் ரியாஸ். சிறுவனுக்கு தாத்தா, பாட்டி ரம்புட்டான் பழம் வாங்கி கொடுத்துள்ளனர். சிறுவன் ஆசை ஆசையாக சாப்பிட்ட போது, ரம்புட்டான் பழத்தின் விதை சிறுவனின் தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால், சிறுவன் மூச்சு விட முடியாமல் தவித்துள்ளான்.

இதையடுத்து, பெற்றோர் சிறுவனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து, மேலப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழிப்புணர்வு அவசியம்:

இந்த துயரச் சம்பவம், குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது, ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்பதை உணர்த்தியுள்ளது. குறிப்பாக, ரம்புட்டான், லிச்சி, பலாப் பழங்கள், திராட்சை, செர்ரி போன்ற பழங்களில் உள்ள விதைகளும், சிறிய உணவுத் துண்டுகளும் சிறு குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை.
சிறு குழந்தைகளின் தொண்டைக் குழாய் மிகவும் சிறியதாக இருக்கும் என்பதால், சிறிய உணவுப் பொருட்கள் கூட எளிதில் அடைப்பை ஏற்படுத்தி மூச்சுத்திணறலை உண்டாக்கிவிடலாம். எனவே, குழந்தைகள் சாப்பிடும்போது பெரியவர்கள் உடனிருந்து முழுமையாகக் கண்காணிப்பது மிக அவசியம். விதைகளை அகற்றியோ அல்லது பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டியோ கொடுப்பது அசாம்பாவிதத்தை தடுக்க உதவும்.

ஒருவேளை, உணவுப்பொருள் தொண்டையில் சிக்கிக்கொண்டால், உடனடியாக முதலுதவி அளிப்பது (குழந்தைகளுக்கான ஹைம்லிச் முறை அல்லது பின்னோக்கித் தட்டுதல் போன்ற நுட்பங்கள்) மிகவும் முக்கியம். இதுகுறித்து பெற்றோர்கள் அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் சிறிய அலட்சியம் கூட ஈடுசெய்ய முடியாத இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதை இந்த சோகமான நிகழ்வு உணர்த்துகிறது.