கல்லிடைகுறிச்சி வழியாக வந்தேபாரத் ரயில்? - கல்லிடை ரயில் பயணிகள் நல சங்க ஆண்டுவிழாவில் தகவல்

vande-bharat-train-via-kallidaikurichi-kallidaikurichi-railway-passenger-welfare-association-anniversary

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி ரயில் நிலைய வளாகத்தில், செயலாளர் பேராசிரியர் விஸ்வநாதன் முன்னிலையில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டன. கௌரவ நிர்வாகி டாக்டர் பத்மநாபன் தலைமையில் ரயில் பயணிகள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.சிறப்பு விருந்தினரக கலந்து கொண்ட பேரூராட்சித் துணைத் தலைவர் இசக்கிப்பாண்டியன் பேசுகையில், இங்கு, எந்தவொரு எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்லாத நிலையில் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் இடைவிடாத முயற்சியால்ர, தற்போது அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் நின்று செல்கின்றன. ரயில் நிலைய வளர்ச்சிப் பணிக்கு எல்லா வகையிலும் உதவிடத் தயார்' என்று கூறினார்.

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் டாக்டர் .பண்டாரசிவன் பேசுகையில், ஒரு சங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று இந்தியாவுக்கே முன் மாதிரியாகத் திகழும் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தை மனதார வாழ்த்துகிறேன் என்றார்

நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் பேசியதாவது, 80 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கல்லிடைக்குறிச்சி மக்களின் ஆதரவுடன் இந்தச் சங்கத்தை நாங்கள் நடத்தி வருகிறோம். இந்தியாவுக்கே முன் மாதிரியாக இந்த சங்கம் திகழ்வதில் பெருமையடைகிறோம்' என்று பெருமிதம் கொண்டார். இணைச் செயலாளர் ஜான் ஞானராஜ், மேலும் புதிய ரயில்களை கல்லிடைக்குறிச்சி வழியாக இயக்க வேண்டும் என்று கூறினார். ஜமாஅத் தலைவர் அப்துல் மஜீத் கூறுகையில், அகிம்சை வழியில் போராடிய காந்தியின் வழியில் அமைதியாகப் போராடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சங்கத்தினரைப் பாராட்டுவதாக தெரிவித்தார்.

சங்கத்தின் நிர்வாகியும் தனியார் பள்ளியின் தாளாளருமான எம் .எஸ்.அசனலி சாதி , மத அரசியல் வேறுபாடுகள் இல்லாத நம் சங்கத்தின் ஒன்றுபட்ட கோரிக்கை தான் மிகப்பெரிய பலம் என்றார். சங்கத்தின் நிர்வாகி எஸ்.சிவராமகிருஷ்ணன் விரைவில் வந்தேபாரத் ரயில் கல்லிடைக்குறிச்சி வழியாக இயக்குவதற்கு சங்கத்தின் மூலம் முயற்சிக்கப்படும் என்றார். நிர்வாகி நாலாயிரமுத்து பேசும் போது, கல்லிடைகுறிச்சி ரயில் நிலையத்தின் வளர்ச்சிக்கு சங்கம் என்றென்றும் துணை இருக்கும் என்றார்.நிர்வாகி பக்ருதீன் தமிழ் பேசுகையில், தாம்பரம் - செங்கோட்டை ரயிலுக்கு தாமிரபரணி ரயில் என்ற பெயரைச் சூட்ட சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமதி மீனா கூறுகையில், இந்த சங்கம் எடுத்த நடவடிக்கைகள் மூலம் தற்போது நம் ரயில் நிலையம் 24 மணி நேரமும் இயங்குகிறது
என்றார். அம்பாசமுத்திரம் ரயில் உபயோகிப்பார்கள் சங்கத் தலைவர் ஜெபஸ்டின் , கூட்டு முயற்சியில் இந்த சங்கம் வெற்றி வாகை சூடி வருகிறது என பெருமிதம் கொண்டார்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைப் பொருளாளர் ஷாகித் மைதீன், துணைத் தலைவர்களான மோகன், ஜவஹர் மனோகர்,ஒருங்கிணைப்பாளர் கேடிசி ரசாக், பொருளாளர் சீதாராமன்,நிர்வாகிகள்ஷேக் ஆஸாத், அனீஸ் பாத்திமா,தானிஷ், வீரப்பபுரம் கார்த்திக்,ஒளிமாலிக், முகமது இஸ்மாயில், ,அகமது ரிலா, அப்துல் மஜீத், சந்திர சேகரன், செல்வராஜ், வக்கீல் சதீஷ் குமார், சாய் சுரேஷ்,சுபாஷ் ஸ்டுடியோ அருணாச்சலம்,அய்யனார் பிரஸ் ஐயப்பன்,வக்கீல் கார்த்திக்,ஷண்முகம்,சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் இணைச் செயலாளர் அப்துல் சமது நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தாம்பரம் செங்கோட்டை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்

கல்லிடை ரயில் நிலையத்தை பிளாக் ஸ்டேஷனாக தரம் உயர்த்தப்பட வேண்டும்

கல்லிடைக்குறிச்சி வழியாக சென்னைக்கு ஒரு புதிய ரயில் இயக்க வேண்டும்.