பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ, நெல்லை மேயர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு புகார்: உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு!

corruption-complaint-against-Palayangottai-DMK-MLA-and-Nellai-Mayor-High-Court-orders-investigation

நெல்லை, ஜூன் 4: பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வஹாப் மற்றும் நெல்லை மாநகர மேயர் ராமகிருஷ்ணன் (எ) கிட்டு ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு மற்றும் பல கோடி ரூபாய் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் வகையில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் ஜூலை 8-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை உத்தமபாண்டிக்குளத்தைச் சேர்ந்த ஜி.மணிகண்டன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:

பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வஹாப், பழையபேட்டை காந்தி நகர் பகுதியில் செய்யது பாத்திமா என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் 81 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி, அதை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த மனையிடங்களுக்கு அரசிடமிருந்து முறையான எந்தவொரு அங்கீகாரமும் பெறப்படவில்லை. இருப்பினும், நெல்லை மாநகர மேயரும், எம்எல்ஏ-வுடன் கூட்டணி அமைத்து, முறைகேடாகவும், விதிகளுக்குப் புறம்பாகவும் கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பு போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதன்மூலம், அங்கீகாரமற்ற இந்த மனையிடங்கள் அதிக விலைக்கு பொதுமக்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன.

அங்கீகாரமற்ற மனையிடங்களையும், வழிகாட்டு மதிப்பீடு நிர்ணயம் செய்யப்படாத மனையிடங்களையும் எக்காரணம் கொண்டும் பதியக்கூடாது என பதிவுத்துறையில் விதிகள் உள்ளன. ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதால் நெல்லை சார்-பதிவாளர் உத்தமன் எந்தவொரு ஆட்சேபணையும் தெரிவிக்காமல் இந்த வீட்டு மனைகளை அப்பாவி பொதுமக்களுக்குப் பதிவு செய்து கொடுத்து வருகிறார். இந்த மனையிடங்களுக்கு வழிகாட்டு மதிப்பீடு இன்னும் முறையாக நிர்ணயம் செய்யப்படவில்லை.

இதன்மூலம், பாளையங்கோட்டை திமுக எம்எல்ஏ அப்துல் வஹாப், நெல்லை மேயர் ராமகிருஷ்ணன் (எ) கிட்டு, நெல்லை மாநகராட்சி ஆணையராகப் பதவி வகித்த தற்போது விருதுநகர் கலெக்டராக இருக்கும் சுகபுத்ரா மற்றும் சார்-பதிவாளர் உத்தமன் ஆகியோர் இணைந்து கோடிக்கணக்கான ரூபாயை அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் திமுக எம்எல்ஏ அப்துல் வஹாப்பும், மேயர் ராமகிருஷ்ணனும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த முறைகேடுகள் தொடர்பாக சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநர், பதிவுத்துறை தலைவர், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவர், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர், நெல்லை ஊழல் தடுப்பு டிஎஸ்பி ஆகியோருக்குப் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். பழனிவேலாயுதமும், அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் எஸ். வினோத்குமாரும் ஆஜராகி வாதிட்டனர். அரசு தரப்பில், மனுதாரர் பாளையங்கோட்டை எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு எதிராக அளித்த புகார் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கு நெல்லை அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.