
தென் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளை நனவாக்கும் வகையில், திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையிலுளள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தொடங்கியது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு இந்த முகாமை தொடங்கி வைத்தார்.
தி.மு.க முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா இது குறித்து கூறியதாவது,''தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், நெல்லை மாவட்ட நிர்வாகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆதரவுடன் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி ரைஸ் (The Rise) அமைப்பின் தலைவர் ஜெகத் கஸ்பார் முன்னின்று இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார். 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த முகாம் மூலம் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் இணையதளம் வழியாகவோ அல்லது 9150060036 என்ற செல்போன் எண் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ய எந்தவிதக் கட்டணமும் கிடையாது. முன்பதிவு செய்த இளைஞர்களுக்கு, முகாமில் பங்கேற்கும் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் இணைய வழியில் பயிற்சி அளித்துள்ளனர். நேர்காணலை எதிர்கொள்வது மற்றும் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் குறித்து அவர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி வழங்கப்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம், அதன் பின்னர் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நடைபெறுகிறது.'
இவ்வாறு அவர் கூறினார்.