திருநெல்வேலியில் மேலும் 4 சிப்காட்கள்... நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டிக்கு ஜாக்பாட்

4-more-sipcot-in-tirunelveli-nanguneri-moolakarai-patti-get-3-sipcots

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் தொழில் பூங்காக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. வளர்ச்சியும் வேலைவாய்ப்பும், மாநிலம் முழுவதும் இது பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏற்கனவே கங்கை கொண்டான் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா உள்ளது. தற்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் கூடுதலாக 4 சிப்காட்கள் அமைக்கப்படவுள்ளன. கங்கை கெண்டான் பகுதியிலேயே இரண்டாவதாக சிப்காட் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அடுத்து, நாங்குநேரியில் இரண்டு சிப்காட்கள் அமைக்கப்படும். இரண்டு சிப்காட் தொழில் பூங்காக்களுக்கும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக, நாங்குநேரி பகுதியில் மறுகால் குறிச்சி மற்றும் திருவரமங்கைபுரம் ஆகிய இரண்டு இடங்களிலும் 2260 ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதுதவிர மூலக்கரைப்பட்டி பகுதியிலும் தமிழ்நாடு அரசு சிப்காட் தொழில்பூங்காவை அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலியில் சிப்காட் தொழில் பூங்காக்களின் எண்ணிக்கை 5ஆக உயரும்.

சிப்காட்டுகள் அமைக்கப்படுவதன் மூலம் பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு முன் வரும். இது நெல்லை மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக அமையும். தூத்துக்குடி மற்றும் விளிஞ்சம் துறைமுகங்களுக்கு அருகிலேயே இவை அமைகின்றன என்பதால் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் இங்கே ஆலைகளை நிறுவ முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.