
இந்து பட்டியல் இனத்தைச் சேர்ந்த மணமக்களின் பெற்றோர் பெயர் கிறிஸ்தவ பெயராக இருந்ததால், திருநெல்வேலி கோவிலில் திருமணம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை அனுமதி மறுத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. சர்ச்சை வெடிக்கவே, அதே கோவிலில் அவர்களுக்கு திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மணமகள் ஜி.மஞ்சு, தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கிராமத்தைச் சேர்ந்த இந்து புதிரைவண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் ஞானராஜ் - அந்தோணியம்மாள் ஆவார்கள். மணமகன் கோபால் சாமி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் ஜோசப் சாமி மற்றும் கோமு.
பெற்றோரின் பெயர் கிறிஸ்தவ பெயர்களாக இருப்பதால், திருநெல்வேலி மேலவாசல் பாலசுப்ரமணியசாமி கோவிலில் திருமணம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஜூலை 3ம் தேதி தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து , மீடியாக்களில் இந்த செய்தி வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் குறிப்பிட்ட தினத்தில் கோபால்சாமி, மஞ்சு திருமணம் நடத்த அனுமதியளித்துள்ளது. திருமணம் நடத்த மணமகன் பேரில் பணம் கட்டி ரசீதும் வாங்கப்பட்டது. இதையடுத்து, கோபால்சாமி, மஞ்சு மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருமணம் நிச்சயிக்கப்பட்டது போல ஜூலை 7ம் தேதி மேலவாசல் பாலசுப்ரமணியசாமி கோவிவில் நடைபெறும்.