
நடிகர் விஜய்யை நாங்கள் கூப்பிடவே இல்லையே என்று நெல்லையில் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் நடக்கும் பல்வேறு பணிகளை பார்வையிட உள்ளாட்சி அமைச்சர் நேரு வருகை தந்தார். அவர் செய்தியாளர்களிடத்தில் கூறியதாவது, 'திமுக ஆட்சியை அகற்றுவேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருவது சிரிப்பை ஏற்படுத்துகிறது. பல கட்சிகளும் ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவது வழக்கம் . திமுக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தை ஜூலை 7ஆம் தேதி தொடங்குகிறார். ஆனால், முன்னரே எங்கள் தலைவர் பணிகளைத் தொடங்கிவிட்டார். ஸ்டாலின்தான் மீண்டும் முதலமைச்சராக வருவார்' என்றார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுகவுடன் கூட்டணி இல்லை என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அவரை நாங்கள் கூப்பிடவே இல்லையே" என்று அமைச்சர் கே.என். நேரு பதில் அளித்தார்.