நெல்லை மானூர் புதிய கல்லூரி கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதம்- அமைச்சர் கோவி. செழியன் பேச்சு

new-college-built-in-nellai-manur-is-a-boon-for-rural-students-minister-kovi-chezhiyan-says

ரைஸ் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவைகளுடன் இணைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது .

இதில் 195-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கெடுத்து வேலை வாய்ப்புக்கான தேர்வுகளை நடத்தியது.15,000 மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்புகளுக்கு தேர்வான பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே .என். நேரு, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பணி ஆணைகளை வழங்கினர்.

விழாவில் பேசிய அமைச்சர் கோவி. செழியன் கூறியதாவது, 'கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டங்களை வகுக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளது. நெல்லை மானூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய கல்லூரி கிராமப்புற மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப முதலமைச்சரின் ஒப்புதலுடன் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 15% கூடுதல் மாணவர்கள் சேர்ந்துள்ளனர், 'நான் முதல்வன்', 'புதுமைப்பெண்' போன்ற திட்டங்களால் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 2000 கௌரவ விரிவுரையாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. நிரந்தர பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டு அந்த பணியிடங்களும் நிரப்பப்படும். இட ஒதுக்கீட்டிற்கு இந்தியாவில் முதன்முதலில் குரல் கொடுத்த மாநிலம் தமிழகம்தான்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.