
தி சப் எடிட்டர் இணையதளத்தில் கடந்த 4ம் தேதி பெற்றோரின் கிறிஸ்தவ பெயர்கள் காரணமாக , இந்து மணமக்களின் திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, புதியவண்ணார் மணமக்களின் திருமணத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
ஜெ. கோபால் சாமி மற்றும் ஜி. மஞ்சு என்ற மணமக்கள் ஜூன் 24 தேதி மேலவாசல் பாலசுப்ரமணி சுவாமி கோவிலில் ஜூலை 7ம் தேதி திருமணம் செய்ய அனுமதி கேட்டு விண்ணப்பத்தை அளித்திருந்தனர். ஆனால், அறநிலையத்துறை ஊழியர்கள், மணமக்களின் பெற்றோர்களின் பெயர்கள் கிறிஸ்தவப் பெயர்களாக இருப்பதை காரணம் காட்டி விண்ணப்பத்தை நிராகரித்தனர். மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வட்டாட்சியரால் வழங்கப்பட்ட பட்டியலின சாதி (SC) இந்து புதிரை வண்ணார் சமூக சான்றிதழ்களை வைத்திருந்தபோதிலும் கோவில் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை
இதுகுறித்து மணமகன் கோபால்சாமி கூறுகையில், "பட்டியல் சாதியினர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினால், அவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் (BC) சான்றிதழ்கள் மட்டுமே கிடைக்கும் . எனது மறைந்த தந்தை, ஜோசப் சாமி, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வந்தார். எங்கள் நிச்சயதார்த்தம் இந்து முறைப்படி நடைபெற்றது. மஞ்சுவின் சகோதரர், ஜி. மனோஜ், சமீபத்தில் அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இஞ்சி குமாரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இந்த ஆதாரங்களை எல்லாம் சமர்ப்பித்தும், மேலவாசல் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் ஊழியர்கள் எங்கள் விண்ணப்பத்தை நிராகரித்தனர்" என்றார்.
இந்த விவகாரம் குறித்து நமது இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, கோபால் மற்றும் மஞ்சுவுக்கு நிச்சயிக்கப்பட்ட தினமான ஜூலை 7ம் தேதி திருமணம் நடத்த கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியது. தொடர்ந்து, மணமகன் கோபால்சாமி , மணமகள் மஞ்சு மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருமணத்துக்கு 4 நாட்கள் இருந்த நிலையில் எங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் மனவேதனையில் இருந்தோம். தற்போது, அந்த வேதனை தீர்ந்து விட்டது. எங்களுக்காக போராடிய சமூக செயல்பாட்டாளர் இசைவாணன் மற்றும் சப்எடிட்டர் இணையதளத்துக்கு நன்றி என்று மணமகன் கோபால்சாமி குறிப்பிட்டார்.