திருநெல்வேலி பல்கலையில் படிக்கும் 2740 மாணவர்களில் 90 சதவிகிதம் மாணவிகள்- அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்

Minister-Kovi-Chezhiyan-is-proud-that-90-percent-of-the-2740-students-studying-at-Tirunelveli-University-are-female

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் INFACT Pro Trainers நிறுவனமும் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமில் 91 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. 2753 பட்டதாரி மாணவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர். அவர்களில் 1323 பேர் முதல் கட்டமாக பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் .பணி ஆணை வழங்கும் நிகழ்வு பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது . நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி சேழியன் ஆகியோர் கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேசுகையில் , 'நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு 35 ஆண்டு காலம் ஆகிறது . நான்கு துறைகள் , 60 மாணவர்கள் என தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் தற்போது 29 துறைகள் 2740 மாணவர்கள் என வளர்ச்சியடைந்துள்ளது. 2740 பேரில் 90% பேர் மாணவிகள் படிக்கின்றனர் என்பது மிகப் பெருமையான விஷயம். பெரியார் , அண்ணா , கருணாநிதி கண்ட கனவை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நனவாக்கியுள்ளது. கல்வி கற்றுக் கொடுப்பது மட்டும் பல்கலைக்கழகத்தின் பணி அல்ல, பட்டம் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுக்கும் பல்கலைக்கழகம் நமது பல்கலைக்கழகம் 'என்றார்.

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசுகையில், 'புதுமைப்பெண் திட்டம் , தவப்புதல்வன் திட்டம் , நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை கொண்டு வந்து கல்விதான் நம்மை பாதுகாக்கும் என்ற நிலையை முதல்வர் ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். இதனால், பெண்கள் அதிக அளவில் கல்வி கற்கின்றனர் . நெல்லை மாவட்டத்தில் இதுவரை 12 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பல ஆயிரம் பேர் வேலை பெற்றுள்ளனர். முதல்வர் உங்களை ஒருபுறம் படிக்க வைக்கிறார். மறுபுறம் வேலை வாய்ப்பை உருவாக்குகிறார். திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகளில் 2 கோடியே 62 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது 'என்றார்.

நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் சுகுமார், மாநகராட்சி ஆணையர் மோனிகா ராணா, மாநகர காவல்துறை துணை ஆணையர் பிரசன்னகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.