
சந்தையில் ஒரு பொருளை விற்பனை செய்ய மார்க்கெட்டிங் அவசியமாக இருப்பதை போன்று தற்போதுள்ள சூழலில் திரைப்படங்களை வெற்றி பெறச் செய்ய புரமோஷன் அவசியமான ஒன்றாக இருக்கிறது என நெல்லையில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
நடிகர்கள் சரத்குமார், சித்தார்த், நடிகை தேவயானி நடித்துள்ள 3 BHK திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது . 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை தேவயானி சரத்குமாருடன் இணைந்து நடித்திருப்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் , நெல்லை ராம் முத்துராம் தியேட்டரில் 3 bhk திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சரத்குமார், சித்தார்த், நடிகை தேவயானி படத்தின் இயக்குனர் கணேஷ் உள்ளிட்டோர் வந்தனர்.
படம் ஓடிக் கொண்டிருந்த நிலையில் ரசிகர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர், சரத்குமார் உள்பட அனைவரும் ரசிகர்களோடு அமர்ந்து திரைப்படத்தை பார்த்தனர்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் நடிகர் சரத்குமார் கூறுகையில், 'படத்தின் பிரமோஷனுக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகிறோம். இயக்குனருக்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய உழைப்பை முழுவதுமாக இந்த படத்திற்காக கொடுத்திருக்கிறேன்.இப்போதுள்ள சூழலில் படத்தை பிரமோஷன் செய்வது முக்கியமான அம்சம். ஒரு பொருளை விற்பதற்கு மார்க்கெட்டிங் எந்த அளவிற்கு முக்கியமோ அதுபோல ஒரு படத்தை வெற்றி பெற செய்ய ப்ரமோஷன் முக்கியமானதாகும். பல ஆண்டுகள் கழித்து தேவயானியுடன் நடித்த அனுபவம் சிறப்பாக இருந்தது. ஐயா, நாட்டாமை போன்ற படங்களின் 2ம் பாகம் வரவேண்டும் என்று ஆசைதான். இந்தப் படம் மூலம் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்ற மெசேஜை மக்களுக்கு கொடுத்துள்ளேக்.இது ஒரு குடும்ப படம். நடுத்தர மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படம் . தொடர்ந்து பாஜகவில் பயணம் எப்படி இருக்கிறது இந்த கேள்விக்கு, சிறப்பாக இருக்கிறது அதைப்பற்றி வேறு மேடையில் சொல்கிறேன்' என்று கூறினார்.
தொடர்ந்து நடிகை தேவையானி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 'சூரிய வம்சம் படத்துக்கு பிறகு நானும் சரத்குமாரும் சேர்ந்து நடித்த எல்லா படங்களும் வெற்றி தான் அதேபோல இந்த படமும் சிறப்பாக வந்துள்ளது. என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அனைவரும் அவர்களது வீட்டின் பெண்ணாக நினைக்கிறார்கள். விரைவில் சூர்யவம்சம் இரண்டாம் பாகம் வெளியாகும் ' என்றார்.